பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினார்.

பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது. அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரிவீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர். கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.